கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x

நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த அணையில் பருவகாலத்துக்கு ஏற்ப நீர் மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல் கர்வ் விதி கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த விதிப்படி பருவ மழைக்காலங்களில் எந்தெந்த தேதிகளில் அணையில் எவ்வளவு நீர்தேக்கிக்கொள்ளலாம் என்ற அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணைப்படி தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் 137 அடி

அதன்படி ஆகஸ்டு 10-ந்தேதி வரை அணையில் 137.5 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிக அளவில் இருந்ததால் அணையில் இருந்து மொத்தம் 10 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.3-வது நாளான இன்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.50 அடி இருந்தது. வினாடிக்கு 5,288 கன அடி தண்ணீர் வருகிறது. தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,122 கனஅடியும், கேரளாவுக்கு கூடுதலாக வினாடிக்கு 3,166 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Next Story