சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும்
சூரமங்கலம்:-
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
அம்ரித் பாரத் திட்டம்
இந்திய நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பயணிகளுக்கான வசதிகள் அதிகப்படுத்தப்பட உள்ளன.. இதன் ஒரு பகுதியாக சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரெயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதாவது ரெயில் நிலையங்களை அழகுபடுத்தவும், மேலும் நடைமேடைகள் கூடுதலாக்கவும், ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்திடவும தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு ரெயில் நிலையங்களுக்கும் ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை செலவிட முடியும்.
கோட்ட மேலாளர் ஆய்வு
இதையொட்டி சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா ஏற்கனவே, கரூர், ஈரோடு, திருப்பூர், வடகோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக அவர் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஜங்ஷன் நுழைவுவாயில், முன்பதிவு டிக்கெட் கொடுக்கும் இடம், நடைமேடையில் வசதிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் கூட்ஷெட் பகுதி, பார்சல் ரெயில் சேவை நடைபெறும் இடங்களை பார்வையிட்டார். கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சரக்கு போக்குவரத்து ரெயில்
சேலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சேலத்திற்கும் வந்து செல்லும் பயணிகள் ரெயில், சரக்கு போக்குவரத்து ரெயில் சேவை குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பயணிகள் வந்து செல்லும் இடங்கள், ரெயில் நிலையத்தில் மேலும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும், ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், ஜங்ஷன் ரெயில் நிலைய அதிகாரி செல்வராஜ் உள்பட ரெயில்வே அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.