மின் கட்டண உயர்வால் கூடுதல் பொருளாதார சுமை: தேனி மாவட்ட மக்கள் கருத்து


மின் கட்டண உயர்வால் கூடுதல் பொருளாதார சுமை:  தேனி மாவட்ட மக்கள் கருத்து
x

மின் கட்டணத்தை உயர்த்தியதால் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.

தேனி

மின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அத்துடன் மின் கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்திக் கொள்ளவும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்த மின் கட்டண உயர்வு குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துகேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

கே.எஸ்.கே.நடேசன் (வர்த்தகர், தேனி) :- மின் கட்டண உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், நாட்டின் நிலை கருதி இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி, மக்களுக்கு மானியத்தில் வினியோகம் செய்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏழை மக்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்குவது வரவேற்கத்தக்கது.

மக்கள் மீதான சுமை

கலையரசி (ஆசிரியை, உப்புக்கோட்டை):- கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தற்போது தான் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். ஒருபுறம் சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையாகி உள்ளது. தற்போதைய சூழலில் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்க வேண்டாம்.

சரவணன் (வியாபாரி, கம்பம்) :- நாட்டின் வளர்ச்சிக்கும், கடன் சுமையை குறைக்கவும் மின்கட்டணத்தை சீரான இடைவெளியில் உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரத்தில் 8 ஆண்டுகளாக உயர்த்தாமல் இருந்து, தற்போது மொத்தமாக உயர்த்துவது என்பது ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார நிலையையும் பாதிக்கும். மின்கட்டணத்தை உயர்த்திய அதே நேரத்தில் மாதாந்திர மின்கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறையையும் கொண்டு வந்திருந்தால் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

செல்வி (குடும்பத்தலைவி, சின்னமனூர்) :- விலைவாசி ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மின்கட்டண உயர்வு என்பது கூடுதல் சுமையாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள், சிறு, குறு வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த மின்கட்டண உயர்வை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.


Next Story