கடலூரில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்: கூடுதல் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


கடலூரில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்:  கூடுதல் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் அளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண், தான் கையில் கொண்டு வந்த மனுவை கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் கொடுத்து விட்டு, தான் கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

வீடு இடிப்பு

இதை சற்றும் எதிர்பாராத கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு வெளியே கொண்டு வந்து, தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். அதன்பிறகு அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கந்தமங்கலத்தை சேர்ந்த இளையராஜா மனைவி சத்தியவேணி (வயது 40) என்றும், அவர் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை, 6 பேர் சேர்ந்து இடித்து விட்டதாகவும், அவரது மகன், மகளை அடித்து துன்புறுத்தி வருவதாகவும், வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டதாகவும் புகார் தெரிவித்தார். இதையடுத்து, அவரிடம் உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்க வேண்டும். அதைவிட்டு இவ்வாறு தீக் குளிப்பு முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத் தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் சோதனையை மீறி அந்த பெண் பெட்ரோல் பாட்டிலுடன் சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story