சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமை: சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன்


சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமை: சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம் 

காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம், சேலம் மாவட்டம் ஓமலூர் என 25 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வரவிருக்கும் புதிய நடைமுறையால் ஏற்கனவே வசூலிக்கப்படும் கட்டணத்தோடு, ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Next Story