புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் - தமிழ்நாடு அரசு விளக்கம்


புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் - தமிழ்நாடு அரசு விளக்கம்
x

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ளது.

சென்னை,


தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் (https:/labour.tn.gov.in/ism/) உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு கோவிட் பெருந்தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 4,16,047 மற்றும் இரண்டாம் கட்டமாக 4,66,025 தொழிலாளர்களுக்கும் மற்றும் கோவிட் இரண்டாம் அலை ஊரடங்கு காலத்தில் 1,29,444 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் அடங்கிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே நேரடியாக சென்று வழங்கப்பட்டன.

மேலும் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, பல்வேறு ரயில்வே நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. கோவிட் காலத்தில், ரயில்வே நிலையங்களில் சிக்கித் தவித்த மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

அதேபோல, கொரோனா பெருந்தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுகளின் இருப்பிடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அண்மையில் தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் காட்சி பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது போலியான காட்சியென காவல்துறையும் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து விளக்கக் கூட்டங்கள் நடத்தி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உறுதியளித்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story