மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் பேச்சு
தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
'எனது உடல்நலனை விட மாநில மக்களின் நலனே முக்கியம். அவசரம், அவசியம் கருதி தமிழ்நாட்டின் நலனுக்காக சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டியது கவர்னரின் கடமையாகும். மசோதாக்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசிடம் கவர்னர் விளக்கம் கோரலாம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார்.
ஒன்றிய அரசுக்கு அவருக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியை பெற்று தரலாம். கவர்னர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படலாம். ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது தமிழக மக்களையும், சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிப்பதாகும். பாஜக ஆளாத மாநிலங்களில் கவர்னர் மூலமாக குடைச்சல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கோப்புகளை கவர்னர் கிடப்பில் போட்டடதால் தான் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டு கதவுகளை தட்ட நேர்ந்தது. அரசின் வாதங்களை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு பதில் அளித்திருப்பது தமிழ்நாட்டு அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி.
கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப இருக்கிறோம். ஏற்கெனவே கவர்னருக்கு அனுப்பப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 143-ன் கீழ் இப்பேரவை மறு ஆய்வு செய்திட இம்மாமன்றம் தீர்மானிக்கிறது எனும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.