அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து ஆதாரம் அளித்தால் நடவடிக்கை- அமைச்சர் சேகர்பாபு பேட்டி


அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து ஆதாரம் அளித்தால் நடவடிக்கை- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

அறநிலையத்துறையில் ேபாலி நியமனம் குறித்து ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மதுரை


அறநிலையத்துறையில் ேபாலி நியமனம் குறித்து ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ரூ.3,884 கோடி நிலம் மீட்பு

மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் சோலைமலை முருகன் கோவிலில் ரூ.2½ கோடி மதிப்பீட்டில் வெள்ளிக்கதவுகள் பொருத்தும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதைதொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 884 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பழமையான கோவில்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கி அரசு திருப்பணி செய்து வருகிறது. ேகாவில்களுக்கு நிலுவையில் இருந்த ரூ.260 கோடி வாடகை பாக்கியை வசூலித்துள்ளோம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டப பணிகள் விரைந்து முடிக்கப்படும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் செல்போன் பயன்பாடு தடை அமலில் உள்ளது. இதேபோல தமிழகத்திலுள்ள 48 முதுநிலை கோவில்களில் செயல்படுத்தப்பட்டு முதலில் திருச்செந்தூரில் அமல்படுத்தப்படும். திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கண்ணகி கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. சில மலைக்கோவில்களில் பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறையுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

10 சிலைகள் மீட்பு

தி.மு.க. அரசு பொறுப்பேற்று வெளிநாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்கு சொந்தமானது என கோவில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

போலி சான்றிதழ் மூலம் அறநிலையத்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறித்த நிருபர்கள் கேள்விக்கு, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கூறாமல் தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களே விசாரித்து உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு

அதன்பின்னர் அமைச்சர்கள் இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு அமைச்சர் சேகர்பாபு, கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.

வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார். மேலும் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி உடல்நலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் யானைக்கு பழமும் கொடுத்து மகிழ்ந்தார். அதன்பிறகு யானை குளிக்கும் நீச்சல் குளத்தையும் பார்வையிட்டார். ஆய்வின் போது, அமைச்சர் மூர்த்தியும் உடன் இருந்தார்.


Next Story