சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை
ஓகைப்பேரையூரில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
ஓகைப்பேரையூரில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைப்பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில், ஆலடி குளத்தின் கரையையொட்டி, ஓகைப்பேரையூரில் உள்ள தெருக்களுக்கு சென்று வருவதற்கு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில், பள்ளி வாகனங்கள் மற்றும் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ஆலடி குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ளதால், குளத்திற்கு வெள்ளையாற்றில் இருந்து வரும் தண்ணீர் செல்வதற்கு சாலையின் குறுக்கே வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டு, மேல்பகுதியில் தரைப்பாலம் மற்றும் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.
சேதமடைந்த தடுப்புச்சுவர்
இந்த நிலையில் தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், குளத்தின் கரைப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்தும், வாய்க்காலின் உள்பகுதியில் பதிக்கப்பட்ட குழாய் மேல்பகுதியில் தெரியும் அளவிற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் சென்று வருவோர் அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எதிரே வரக்கூடிய வாகனங்கள் சேதமடைந்த தரைப்பாலத்தில் தடுமாறி வாய்க்காலுக்குள் விழும் அபாயம் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இந்த சாலை வழியாக செல்லவே ேவாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தரைப்பாலம் மற்றும் தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.