விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு


விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு
x

விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது குன்னம் தாலுகா ஆய்க்குடியை சேர்ந்த சில விவசாயிகள் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப்பாதையை 2 பேர் ஆக்கிரமித்து கொண்டு தகராறு செய்து வருகின்றனர். இதனால் அந்த பாதை வழியாக எங்களால் செல்ல முடியாததால், சரியாக விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எனவே அந்த 2 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, வண்டிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஜமாஅத் நிர்வாகிகள் மனு

குன்னம் தாலுகா, லெப்பைக்குடிக்காடு பொதுமக்களின் சார்பில் நான்கு ஜமாஅத் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சதுர்த்தி அன்று எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் விநாயகர் கோவிலில் இருந்து சிலையை மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள வழியாக ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். தற்போது வேறு ஊர்களை சேர்ந்தவர்களும் எங்கள் ஊர் வழியாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.

இதனால் பிரச்சினை ஏற்படலாம். இதற்கு போலீசார் துணை போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அச்சம் ஏற்படுகிறது. எனவே வழக்கமாக உள்ள நடைமுறை போல் எங்கள் ஊரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பெண் சத்தம் போட்டதால் பரபரப்பு

சென்னையை சேர்ந்த பவுன் அம்மாள்(வயது 58) என்பவர், இறந்த தனது தந்தையின் உடலை அடக்கம் செய்ததற்கு சுடுகாடு ரசீதை தராமல் பிலிமிசை கிராம நிர்வாக அலுவலர் இழுத்தடித்து வருகிறார் என்றும், அதற்கு அவர் பணம் கேட்கிறார் என்றும் சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது தந்தையின் உடலை அடக்கம் செய்ததற்கு சுடுகாடு ரசீதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்து விட்டு சென்றார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 203 மனுக்களை கலெக்டர் பெற்றார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சாத்தனூர் தேசிய தொல்லுயிர் கல் மர பூங்காவில் உள்ள கல் மரம் 1940-ல் மகாராஜபுரம் சீதாராமன் கிருஷ்ணன் என்ற எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா என்ற அமைப்பில் இயக்குனராக பதவி வகித்தார். இவரது பிறந்த நாளான கடந்த 24-ந்தேதியன்று மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு "சாத்தனூர் தேசிய தொல்லுயிர் கல் மர பூங்காவின் சிறப்பு" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.


Related Tags :
Next Story