அனைத்து பணியிடங்களையும் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை
மருத்துவத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மருத்துவத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திறப்பு விழா
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன் (திருவாரூர்), மாரிமுத்து(திருத்துறைப்பூண்டி), பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வநாயகம், மருத்துவக்கல்வி இயக்ககத்தின் இயக்குனர் நாராயணபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, உணர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவு, ஆதிச்சப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தங்கும் கட்டிடம் மற்றும் செவிலியர் குடியிருப்பு, செருமங்கலம் துணை சுகாதார நிலையம், வெங்கத்தான்குடி துணை சுகாதார நிலையம், உபயவேதாந்தபுரம் ஆரம்ப சுகாதார புறநோயாளிகள் பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசின் மானிய கோரிக்கை அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கேத்லேப் கருவி, 50 படுக்கை வசதி கொண்ட ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப்பிரிவு, ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் கருவி என நடப்பு ஆண்டில் ரூ.44.30 கோடி மதிப்பீட்டில் 14 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் நிரப்ப மருத்துவ தேர்வாைணயத்திற்கு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 237 பேருக்கு புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அக்டோபர் இறுதிக்குள்...
வருகிற அக்டோபர் மாத இறுதிக்குள் அனனத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்திட இயலாது.
ஏற்கனவே நடந்த 7,448 செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண் வழங்கி பணி நியனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் 50 சதவீதம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ளவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வில் உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.
தற்கொலைகளை குறைக்க நடவடிக்கை
தமிழகத்தில் தற்கொலைகளை குறைப்பதற்கு அரசின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடைகளில் சாணிப்பவுடர் விற்பனையை தடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் எலி பேஸ்டை பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் கடைகளில் விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அருகில் மருத்துவமனை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலைய இணை இயக்குனர் சுரேஷ், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபன், திருவாரூர் நகரசபை உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.