'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை


ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை
x

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

இலவச வீடு

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டார்.

இதுதொடர்பாக அவர் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும், அரசின் திட்டங்களை அனைத்து பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பது பற்றியும் முதல்-அமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு வங்கிக்கடன் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வரின் முகவரி திட்டம்

வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வாடகை மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அதேபோன்று இந்த திட்டத்தில் முறைகேடாக வீடுகள் பெற்றவர்களை கண்டறிந்து, அந்த வீட்டை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு சிறப்பு மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் முகவரி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் மனுஅளித்த பொதுமக்களிடம் மனு மீது எடுத்த நடவடிக்கைகள் திருப்தியாக உள்ளதா என்று கேட்டறியப்பட்டு, அவர்களின் குறைகள், பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படுகிறது.

10,12-ம் வகுப்புகள் அரசு பொதுத்தேர்வுகள் முடிவில் பின்தங்கி காணப்பட்ட வேலூர் மாவட்டம் கடந்த கல்வியாண்டில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் அடைந்தது. அதனை இந்த கல்வி ஆண்டில் மேலும் முன்னேற்றம் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்

கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பொதுமக்களுக்கு அதிகளவு வங்கிக்கடனுதவி வழங்கப்பட உள்ளது. மேலும் பயனாளிகளுக்கு உரிய காலத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்யும்படி அதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவை மேலும் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயிற்சி பெறும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கால்வாய் கட்டும் பணி, பாதாள சாக்கடை திட்டம், சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கும்படி முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Next Story