குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
பழனி முருகன் கோவிலில் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பழனி முருகன் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் படிப்பாதையில் வரும் போது, வெளிப்பிரகாரத்தில் நிற்கும் போது தாங்கள் கொண்டு வந்த உணவு, பழம் உள்ளிட்டவற்றை வைக்கின்றனர். அவற்றை குரங்குகள் உண்டு வசிக்கின்றன. கடந்த சில நாட்களாக குரங்குகளால் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக பக்தர்களிடம் இருந்து தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை குரங்குகள் பறித்து செல்கின்றன. குறிப்பாக குழந்தைகளை பயமுறுத்தி, உணவுப்பொருட்களை குரங்குகள் பறித்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பக்தர்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு செய்தது. இதற்காக மலைக்கோவிலின் வெளிப்பிரகார பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் அதில் குரங்குகள் ஏதும் சிக்கவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பெரும்பாலும் குரங்குகள் பக்தர்களை அச்சுறுத்துவதில்லை. எனினும் பக்தர்களில் சிலர் உணவை வைத்துவிட்டு விரட்டுகின்றனர். அப்போதுதான் அவை மனிதர்களை அச்சுறுத்துகிறது. எனவே பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குரங்குகள் சிக்கினால் அவற்றை கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளோம் என்றனர்.