ஒப்பந்ததாரரை கைது செய்ய நடவடிக்கை-மாநகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க. வலியுறுத்தல்


ஒப்பந்ததாரரை கைது செய்ய நடவடிக்கை-மாநகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க. வலியுறுத்தல்
x

நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை சரிந்து விழுந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை சரிந்து விழுந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆணையாளரிடம் மனு

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சியில் பணி

பாளையங்கோட்டை மண்டலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. மைதானத்தை மேம்படுத்தும் திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் நிதி ஒதுக்கப்பட்டு, பணி தொடங்கப்பட்டது. ஓரிரு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்தது. அதன்பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள பணிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. அந்த பணிகள் எல்லாம் சரிவர நடைபெறாமல், மிகவும் தொய்வு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் கஷ்டங்கள் கொடுப்பதாகவும், அவதி ஏற்படுத்துவதுமாக இருந்தது.

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முக்கிய திட்டமான வ.உ.சி. மைதானத்தை மேம்படுத்தும் பணியில் பார்வையாளர்கள் மாடம் (கேலரி) தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டு, அதன் மீது மேற்கூரையும் அமைக்கப்பட்டது. இதனை நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர். பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில் திறக்கப்பட்ட குறுகிய காலத்தில் வ.உ.சி. மைதானத்தின் கேலரி மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்ய வேண்டும்

இந்த திட்டப்பணியில் கட்டுமானத்தின் தரத்தையும், உறுதித்தன்மையையும் கண்காணிக்க அதிகாரிகள் தவறி விட்டனர். ஒப்பந்ததாரர் உறுதியான, தரமான பொருட்களை பயன்படுத்தாமல் அரசை ஏமாற்றி, நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளார். அதை சரிசெய்யும் வகையில் சேத மதிப்பை கணக்கீடு செய்து நஷ்ட தொகையை ஒப்பந்ததாரரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மீதமுள்ள கட்டிட பகுதியை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து மக்கள் அச்சத்தை போக்க வேண்டும். இதுதவிர ஒப்பந்ததாரர், அரசு என்ஜினீயர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அப்போது மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story