காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

காந்தி ஜெயந்தி தினத்தில் சட்ட விதிகளின் படி விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காந்தி ஜெயந்தி தினத்தில் சட்ட விதிகளின் படி விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

53 நிறுவனங்களில் முரண்பாடுகள்

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தன்று சட்டப்படி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா என்று திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் அப்போது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறைகள்) சட்டம் 1958, உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகள் 1958, மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961 மற்றும் விதிகள் கீழ் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமலும், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய 67 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 25 நிறுவனங்களிலும் என மொத்தம் 53 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அந்நிறுவன உரிமையர்கள் மீது சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்

மேலும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் இதர பணிகளில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவில்லை என தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் சட்ட முறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011 ஆகிய சட்டங்களின் கீழ் நெல், தேயிலை கொள்முதல் நிலையங்கள், காய்கறி கடைகள், மீன் கடைகள், இறைச்சி கடைகள், சாலையோர கடைகள் மற்றும் சந்தைகள், அனைத்து கடைகள், நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முரண்பாடு கண்டறியப்பட்ட நிறுவனங்களில் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story