வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊராட்சி மன்ற தலைவர் பணம் மோசடி செய்ததாகவும், இதனை கண்டுக்கொள்ளாமல் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குறைதீர் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் ஒன்றாக வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 300 விவசாய குடும்பங்களிடமிருந்து 300 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை அரசு சிமெண்டு ஆலை சுண்ணாம்பு கல் சுரங்கத்திற்காக கடந்த 1996-ம் ஆண்டு கையகப்படுத்தியது. அப்போது நிலத்திற்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் சிமெண்டு ஆலை நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட இழப்பீடை அதிகரித்து வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் நிலம் கொடுத்த விவசாயிகள் வழக்கு தாக்கல் செய்தனர். தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது. மிகக்குறைந்த விலையில் விவசாயிகளிடம் வாங்கிய நிலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கு மேல் சுண்ணாம்பு கற்களை எடுத்து சிமெண்டு தயாரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே 25 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தி இதுவரை உரிய இழப்பீடு வழங்காமல் சிமெண்டு ஆலை நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து வருகிறார்கள். மேலும் தங்களது குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்க முடியாமலும், திருமணங்கள் நடத்த முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
உரிய இழப்பீடு...
எனவே இழப்பீடு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோன்றுவதற்கான பணிகள் குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஜூன் மாதம் 7-ந் தேதி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் அரசு சிமெண்டு ஆலை நடத்த இருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கான உரிய இழப்பீடு தொகை வழங்கிய பிறகே சிமெண்டு ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்திரா நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், இலந்தைக்கூடம் கிராமம் இந்திரா நகரில் 123 வீடுகள் உள்ளன. இந்நகருக்கு செல்லும் பொது பாதையில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இடையூறாக இருந்து வருகின்றார்கள். இதுகுறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேற்படி ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பட்டா
ரெட்டிபாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், தாங்கள் 60 ஆண்டுகளாக குடியிருந்த பகுதியில் பட்டா கேட்டு அதிகாரியிடம் மனு அளித்திருந்தோம். அதன்பேரில் கடந்த 2011-ம் ஆண்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை எச்.எஸ்.டி. பட்டாவாக மாற்றித்தர கோரி ஒவ்வொருவரும் கடந்த 2022-ம் ஆண்டு ரூ.800 செலுத்தியுள்ளோம். ஆனால் இதுநாள் வரை மாற்றப்படவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சாத்தமங்கலம் கிராம மக்கள் அளித்த மனுவில், சாத்தமங்கலம் ஊராட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் மூலம் கடந்த 2021-22-ம் ஆண்டிற்கு வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 893 என தெரிய வருகிறது.
பணம் மோசடி
இத்தொகையை அரசு கணக்கில் வங்கியில் செலுத்தாமல் ஊராட்சி மன்ற தலைவர் மோசடி செய்து வருகிறார். அதன்பின் வங்கியில் செலுத்தப்படாத நிலையில் அத்தொகைக்கு உரிய வட்டித்தொகை 4.5 சதவீதம் என ரூ.7,500 வட்டி தொகை சேர்த்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 493 வங்கியில் செலுத்தியுள்ளனர். வரியினங்கள் வசூல் செய்யப்பட்ட பல ரசீது புத்தகங்களை ஊராட்சி மன்ற தலைவர் மறைத்து விட்டதால் வரியினங்கள் வசூல் செய்யப்பட்ட தொகையின் உண்மையான கணக்குத் தொகை மறைக்கப்பட்டு மோசடி செய்திருப்பது தெரிய வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டுகொள்ளாமல் இருந்ததிலிருந்து ஊராட்சி மன்ற தலைவரின் மோசடி செயலுக்கு இவரும் உறுதுணையாக இருந்தது தெரிய வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து உரிய ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.