வீட்டுமனைகளை ஏமாற்றி வாங்கிய மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


வீட்டுமனைகளை ஏமாற்றி வாங்கிய மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டுமனைகளை ஏமாற்றி எழுதி வாங்கிய மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்புலன்சில் வந்து ஓய்வு பெற்ற தலைமைஆசிரியை மனு அளித்தார்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக 476 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தபால் நிலையம்

கூட்டத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்காமல் ஊராட்சி தலைவர்கள் அலைக்கழிக்கின்றனர். மேல்மாயில் ஊராட்சியில் பணியாற்றும் 4 குடிநீர் ஆபரேட்டர்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஊதியம் வழங்கவில்லை. அரசு நிர்ணயித்த ஊதியத்தை மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். ஊதியம் சரியாக வழங்காத ஊராட்சிமன்ற நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேரணாம்பட்டு பகுதி செயலாளர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், பேரணாம்பட்டு பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தபால் நிலையம் குறுகலான தெருவில் அமைந்துள்ளது. தபால் நிலையத்துக்கு வருபவர்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள பேரணாம்பட்டு அரசு பழைய மருத்துவமனை கட்டிடம் ஒன்றில் தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மகள் மீது நடவடிக்கை

வேலூர் அரசமரப்பேட்டையை சேர்ந்த சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைஆசிரியை வித்யாவதி (வயது 70) ஆம்புலன்சில் வந்து மனு அளித்தார். எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நான் தற்போது வேலூரில் வசிக்கும் இளைய மகளின் பராமரிப்பில் உள்ளேன். செய்யாறில் வசிக்கும் மூத்தமகள் என்னை ஏமாற்றி ரூ.1 கோடி மதிப்பிலான 6 வீட்டுமனைகளை எழுதி வாங்கிக்கொண்டார். பின்னர் என்னை சரிவர கவனிக்கவில்லை. மூத்தமகள் ஏமாற்றி எழுதி வாங்கிய வீட்டுமனைகளை மீட்டு தர வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தேன். அதன்மீது உதவி கலெக்டர் நடத்திய விசாரணை திருப்திகரமாக இல்லை. எனவே இதுதொடர்பாக மீண்டும் விசாரித்து மூத்தமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உடனடியாக உதவிகலெக்டர் கவிதா முன்னிலையில் விசாரித்தார். அப்போது வித்யாவதி தனது 2 மகள்கள் மீதும் தனித்தனியாக மனு அளித்ததும், வீட்டுமனைகளை மூத்தமகள் பெயருக்கு மாற்றி கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கலெக்டர், வித்யாவதியின் இளையமகள், அவருடைய கணவரிடம் உடல்நல குறைவால் அவதிப்படும் வயதானவரை ஆம்புலன்சில் அடிக்கடி அழைத்து வந்து அலைக்கழிக்க கூடாது என்று கண்டித்தார். மனுவின் மீது மேல்விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு சான்றிதழ்

கூட்டத்தில் சிறுசேமிப்பு விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 14 மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயங்களையும், சிறுசேமிப்பு வசூலில் சிறப்பாக செயல்பட்ட 33 முகவர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் முதல்-அமைச்சர் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் குறிக்கோள், தகுதி, பயன்கள் மற்றும் தொலைநோக்கு திட்டம் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரத்தை பொதுமக்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.


Next Story