புழல் ஜெயிலில் அதிரடி சோதனை: கைதிகள் அறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
புழல் ஜெயிலில் கைதிகள் அறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகளுக்கு சப்ளை செய்த சிறை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
புழல் விசாரணை ஜெயிலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், தண்டனை ஜெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், பெண்கள் சிறையில் 450-க்கு மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில் கைதிகள் செல்போன், கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. சிறை போலீசாரும் கைதிகளின் அறையில் அடிக்கடி சோதனை செய்து செல்போன் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறை கைதிகளுக்கு காவலர் ஒருவரே கஞ்சா போதை மாத்திரைகள் சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு சிறை காவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் விசாரணை ஜெயிலில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போரூர் பகுதியைச் சேர்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யா (வயது 25) என்பவர் தங்கியிருந்த 80-வது அறையில் சோதனை செய்தபோது, அங்கு 6 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் போதை மாத்திரைகள் எப்படி வந்தது என விசாரித்த போது சிறை காவலர் திருமலை ராஜா நம்பி (30) என்பவர் பணம் பெற்றுக் கொண்டு போதை மாத்திரைகளையும், கஞ்சாவையும் சப்ளை செய்து வந்தது தெரிந்தது.
மேலும் திருமலை ராஜா நம்பி என்பவர் முகப்பேரில் ரூ.1,500 கோடி நகை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆல்வின் (48)என்பவருக்கும் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வினியோகம் செய்தது தெரியவந்தது.
உடனே சிறை போலீசார் ஆல்வின் அறையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 10 கிராம் கஞ்சா, 6 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புழல் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கஞ்சா போதை மாத்திரைகளை சப்ளை செய்த திருமலை ராஜா நம்பி என்பவரை சிறைத்துறை உயரதிகாரிகள் பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.