கந்துவட்டி புகார்களின் மீது நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்துவட்டி புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அவசர தேவைகளுக்காக பணம் கடனாக பெற்று கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கந்துவட்டி தொழிலில் ஈடுபடும் நபர்களை அடையளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பாதிக்கபட்ட நபர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்டுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட நபர்கள் அதிலிருந்து மீண்டு நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படும். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இனி எவரும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படாதவாறு அனைத்து தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.