நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என வதந்தி பரப்பினால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என வதந்தி பரப்பினால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x

வயநாட்டை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

நீலகிரி,

வயநாட்டை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா எச்சரித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழை தற்போது குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்கள் பெய்த மழை காரணமாக, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை மாற்றும் பணியில் மின்வாரியத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் பாதுகாப்பு படையினரும் நீலகிரி வந்துள்ளனர். உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர் லட்சுமி பவ்யா நேற்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வயநாட்டைப் போல நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான வதந்திகள் பரவுகின்றன. இதனால் மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர். வருவாய்த் துறையினருடன் தீயணைப்பு, போலீஸ், வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து, நீலகிரியில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் சமாளிக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

வயநாட்டை போல நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அவ்வாறு வதந்தி பரப்பினால் போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் 1077 என்ற எண் மூலம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து இரவு ரோந்து பணிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் அடங்கிய 42 குழுக்கள் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான முகாம் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

நிலவரத்தை முதல்-அமைச்சர் நேரடியாக கண்காணித்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். நீலகிரியில் மண்சரிவு பாதிப்பு உள்ள இடங்களை ஆய்வு செய்ய புவியியல் துறை அதிகாரிகள் இந்த வாரத்தில் வருகின்றனர்" என்று கூறினார்.


Next Story