பொக்லைன் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொக்லைன் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது30). பொக்லைன் டிரைவர். இவர் சம்பவத்தன்று பால் வாங்க சென்று உள்ளார். அப்போது பொது பாதையில் சரக்கு ஆட்டோவை நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே ஏன் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படுத்தி வாகனத்தை நிறுத்தி உள்ளீர்கள் ? என கேட்டு உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் ஆனந்தகுமாரை தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த ஆனந்தகுமார் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இதுவரை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து, ஆனந்தகுமார் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியும், தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.