ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை


ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2024 9:37 PM IST (Updated: 28 Jan 2024 9:45 PM IST)
t-max-icont-min-icon

விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

சென்னை,

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ந்தேதி முதல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு 77 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு நடைமேடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை தவிர 250 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம்னி பஸ்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் முன்பதிவு மையங்கள் தவிர, விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர வளச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், இன்று மாலை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் யுவராஜ் மற்றும் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அனுமதியற்ற முறையில் ஆம்னி பஸ்கள் டிக்கெட் விற்பனை செய்த நபர்களிடமிருந்து டிக்கெட் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல, நேற்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின்போது, 'ஆம்னி பஸ் நிறுவனங்கள் மூலமாக டிக்கெட் புத்தகங்கள் வைத்து பஸ் நிலையங்களில் இதுபோன்று முன்பதிவு செய்யப்படுவதில்லை என்றும், அவ்வாறு செய்யும் இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்திருந்தனர்.

எனவே, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது போலீஸ் துறை மூலமாக குற்றவியல் மற்றும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story