போலி டாக்டர் என்று கண்டறியப்பட்டால் நடவடிக்கை
போலி டாக்டர் என்று கண்டறியப்பட்டால் சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுதுறை முதன்மை செயலாளர் ககன் தீப்சிங் பேடி கூறினார்.
முதன்மை செயலாளர் ஆய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு முதன்மை செயலாளரும், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ககன் தீப்சிங் பேடி நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, ஆண்கள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் அங்கு ரூ.56 கோடியில் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டு, அறுவை சிகிச்சை வார்டு, பிரசவ வார்டு, பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவு வார்டு, போன்ற பல்வேறு வார்டுகளை பார்வையிட்டோம். மேலும் பிரசவ வார்டு மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு சிறப்பு வார்டுக்கு மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டதற்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டிடம்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அந்தஸ்து வழங்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய சுகாதார பணி மூலமாக அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடமாக தரைதளத்துடன் மூன்று அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் ரூ.24 கோடி மற்றும் ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் நகர்புற சுகாதார நிலையம் ரூ.1.20 கோடியிலும், 27 இடங்களில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்களும் கட்டப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதலாக கட்டிடம், கூடுதல் மருத்துவ உபகரணங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
போலி டாக்டர்கள்
மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலமாக டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
தமிழக முதல்-அமைச்சர் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்தும், பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் நடவடிக்கை எடுத்து வருகிறார். போலி டாக்டர்கள் என்று கண்டறியப்பட்டால் சுகாதாரத் துறையின் மூலமாகவும், மாவட்ட கலெக்டர் மூலமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வராசு, இணை இயக்குனர் மாரிமுத்து, துணை இயக்குனர் செந்தில், வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா, மருத்துவ அலுவலர் சிவகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.