அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து ஆதாரம் அளித்தால் நடவடிக்கை: அமைச்சர் பேட்டி
அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மதுரை,
நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 884 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பழமையான கோவில்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கி அரசு திருப்பணி செய்து வருகிறது.
கோவில்களுக்கு நிலுவையில் இருந்த ரூ.260 கோடி வாடகை பாக்கியை வசூலித்துள்ளோம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டப பணிகள் விரைந்து முடிக்கப்படும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் செல்போன் பயன்பாடு தடை அமலில் உள்ளது. இதேபோல தமிழகத்திலுள்ள 48 முதுநிலை கோவில்களில் செயல்படுத்தப்பட்டு முதலில் திருச்செந்தூரில் அமல்படுத்தப்படும். திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கண்ணகி கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. சில மலைக்கோவில்களில் பாதை அமைப்பது தொடர்பாக வனத்துறையுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
போலி சான்றிதழ்
தி.மு.க. அரசு பொறுப்பேற்று வெளிநாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்கு சொந்தமானது என கோவில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
போலி சான்றிதழ் மூலம் அறநிலையத்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் குறித்த நிருபர்கள் கேள்விக்கு, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கூறாமல் தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களே விசாரித்து உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.