மஞ்சள் மூட்டைகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
மஞ்சள் மூட்டைகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மஞ்சள் மூட்டைகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
ஈரோடு மாவட்டம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டை, டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அட்டைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், 'நாங்கள் அனைவரும் மஞ்சள் பயிரை சாகுபடி செய்து விவசாயம் செய்து வருகிறோம். மேலும் நாங்கள் விளைந்த மஞ்சள்களை ஈரோடு பார்க்க பகுதியில் உள்ள ஒரு உழவன் மண்டியில் இருப்பு வைத்து வருகிறோாம். சுமார் 30 ஆண்டுகளாகவே அங்கு இருப்பு வைத்து வருகிறோம். எங்களுக்கு தேவைப்படும் போது ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்று அதற்கான பணத்தை மண்டியின் உரிமையாளர் தருவார். மேலும் இதற்கான கமிஷன் தொகையை அவர் எடுத்துக்கொள்வார்.
1,300 மூட்டைகள்
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி மஞ்சள் மண்டியின் உரிமையாளர் எங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது மஞ்சள் மண்டியில் இருப்பு வைத்திருந்த 1,300 மஞ்சள் மூட்டைகளை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர் என்றார். உடனே நாங்கள் மஞ்சள் மண்டிக்கு விரைந்து சென்றோம். அங்கு மண்டியின் உரிமையாளர் மற்றும் அவர்களது மகன் மற்றும் சிலர் இருந்தனர். அவர்கள் எங்களிடம் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளோம் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் ஒரு மாத காலமாகியும் எங்களுக்கான மஞ்சள் மூட்டைகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்றனர்.
நடவடிக்கை
அதன்பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் மாவட்ட ககெலக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் கலெக்டர், மஞ்சள் மண்டியில் திருடுபோன மஞ்சள் மூட்டைகள் விரைவில் கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.