லஞ்சம் கொடுக்காததால் ஆன்லைன் அபராதம் விதித்ததுடன் லாரி உரிமையாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
லஞ்சம் கொடுக்காததால் ஆன்லைனில் அபராதம் விதித்து, லாரி உரிமையாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மேளன நிர்வாகிகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
முதல்-அமைச்சருக்கு மனு
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் பாலாஜி (வயது34) என்பவருக்கு சொந்தமான லாரி ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டையில் இருந்து திருச்சிக்கு லோடு ஏற்றி வந்தது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலத்தூர் பகுதியில் கடந்த 16-ந் தேதி வந்தபோது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தார். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த நிலையில், ரூ.100 லஞ்சமாக கேட்டு உள்ளார். வாகன உரிமையாளர் ரூ.50 கொடுத்து உள்ளார். அதற்கு ஒப்புகொள்ளாத போலீஸ்காரர் வேண்டும் என்றே ரூ.2,500 ஆன்லைன் மூலம் அபராதம் விதித்து உள்ளார்.
பணியிடை நீக்கம்
இதை தட்டிக்கேட்ட லாரி உரிமையாளரை ஒருமையிலும், தகாத வார்த்தைகளாலும் திட்டி, சட்டையை பிடித்து அடித்து சாலையோர பள்ளத்தில் தள்ளி உள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்களும், பயணிகளும் போலீஸ்காரரை கண்டித்து உள்ளனர். இது தொடர்பாக புகார் கொடுக்க உரிமையாளர் தனது வாகனத்தை பாடலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் நிலையத்தில் வாகன உரிமையாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டு, அவரை பெரம்பலூர் சிறையில் அடைத்து, அவரது வாகனத்தையும் சிறை பிடித்து உள்ளனர்.
எனவே இச்சம்பவத்தை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடுமையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.