ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 654 காளைகள்


ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 654 காளைகள்
x
தினத்தந்தி 19 March 2023 1:01 AM IST (Updated: 19 March 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 654 காளைகள்

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, ஆலயத்தின் முன்பாக நேற்று நடைபெற்றது. இதையொட்டி காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மொத்தம் 654 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க சுழற்சி முறையில் தலா 25 பேர் வீதம் 250 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

32 பேர் காயம்

இதில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் வீரர்களை பந்தாடின. இருப்பினும் காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் அண்டா, பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள், கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட மொத்தம் 32 பேர் காயமடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பொதுமக்கள் கண்டு களித்தனர்

இந்த ஜல்லிக்கட்டை ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதில் சிலர் மாடிகளிலும், மரக்கிளைகளிலும் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story