"அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை" - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தேனி வீரபாண்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் அரசிடம் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வீட்டு மனை விற்பனை நடைபெற்று வருகிறது. அரசால் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. உள்ளாட்சிகளில் அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்யக்கூடாது என சட்டம் உள்ளது.
இந்த சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனால் முறைகேடாக நடைபெற்ற பத்திரப்பதிவுகளை ரத்து செய்யவும், முறைகேட்டில் தொடர்புடைய பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்த வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார். ஆனால் அவரை இதுவரை கைது செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப் பதிவு தொடர்பான தகவல்களை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப் பதிவு செய்வது தொடர்ந்தால் துறை செயலாளர்கள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட வேண்டியவது வரும்.
அங்கீகரிக்கப்படாத மனையை பத்திரப் பதிவு செய்த சார் பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவுத் துறை தலைவர் கோர்ட்டில் செப்.22-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.