தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை:தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் எச்சரிக்கை


தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை:தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ் எச்சரித்தார்.

தேனி

தமிழ் வளர்ச்சித்துறை

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ் நேற்று வந்தார். அங்குள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றில் அவர் ஆய்வு செய்தார்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அலுவலக பணிகள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளை பார்வையிட்டார். பத்திரிக்கையாளர் நல வாரியம் தொடர்பான கோப்புகள், தினசரி செய்தி நறுக்குகள், எதிர்மறை செய்திகள் குறித்து மாவட்ட கலெக்டரின் குறிப்பின்படி அனைத்து துறைகளுக்கும் விளக்கம் கோருதல், அரசு விழாக்களில் அரசு சீர்மரபு முறை பின்பற்றுதல் உள்ளிட்டவை தொடர்புடைய நடப்பு கோப்புகளை அவர் பார்வையிட்டார்.

மேலும் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் புகைப்பட கண்காட்சி, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

தமிழில் பெயர் பலகை

பின்னர், தேனி பழைய பஸ் நிலையம், மதுரை சாலை மற்றும் கடை வீதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட அளவில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா? என்று அவர் ஆய்வு செய்தார். அப்போது தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் வளர்த்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ் கூறும்போது, 'அனைத்துத்துறை அலுவலர்களும் கோப்புகள் அனைத்தையும் தமிழில் பராமரிக்க வேண்டும். அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும். அரசு கடிதங்களை தமிழில் பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story