சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்புஆய்வு
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் குமரன் மற்றும் நெல்லை மண்டல தொழிலாளர் இணைஆணையர் ஹேமலதா ஆகியோர் ஆலோசனையின்படி தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தலைமையில் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், ராம்மோகன், உதவி ஆய்வாளர்கள் சூரியன், சமுத்திர வேலு, சங்கரகோமதி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர்.
நடவடிக்கை
அப்போது தேசிய விடுமுறை தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல் தொழிலாளர்களை பணியமர்த்திய முரண்பாட்டிற்காக 29 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 25 உணவு நிறுவனங்கள், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 60 நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.