5 நடிகர்கள் மீது நடவடிக்கை: பட அதிபர்கள் சங்க பொதுக்குழு தீர்மானம்


5 நடிகர்கள் மீது நடவடிக்கை: பட அதிபர்கள் சங்க பொதுக்குழு தீர்மானம்
x

ஒத்துழைக்காத 5 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட அதிபர்கள் சங்க பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் ராமசாமி என்ற முரளி, துணைத்தலைவர்கள் ஜி.எம்.தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் 400-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* 20 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தை, பதிவுத்துறையில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

* தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிகொள்ள கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பையனூரில் இடம் வழங்கப்பட்டது. அதனை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது

* தயாரிப்பாளர்களை அவமதிக்கும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது.

* திரைப்படம் வெளியான அன்றைய தினமே திரைப்படங்களின் விமர்சனங்களை மோசமாக ஒளிபரப்பு செய்யும் நபர்கள் மீது கண்டிப்பாக தொழில்ரீதியாகவும், சட்டரீதியாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும்.

* தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் 5 நடிகர்களை வைத்து படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்ட பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story