தமிழகம் முழுவதும் கந்து வட்டி புகாரில் ஒரே வாரத்தில் 32 பேர் கைது


தமிழகம் முழுவதும் கந்து வட்டி புகாரில் ஒரே வாரத்தில் 32 பேர் கைது
x

தமிழகம் முழுவதும் கந்து வட்டி புகாரில் கடந்த ஒரு வாரத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

கந்துவட்டியால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க தமிழ்நாடு காவல்துறை "ஆபரேசன் கந்துவட்டி" என்ற அதிரடி நடவடிக்கையினை 8-6-2022 முதல் எடுத்து வருகிறது. இதில் கந்துவட்டித் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு காவல்துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 124 கந்து வட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டது.

32 பேர் கைது

அதில் 89 புகார் மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 32 கந்து வட்டி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

22 கந்து வட்டி குற்றவாளிகளின் வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்களான பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுக்கள், கையெழுத்திடப்படாத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

19 வழக்குகள் பதிவு

மாநிலத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் 6 வழக்குகள் மற்றும் சேலம் மாநகரில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story