கடமலைக்குண்டு அருகே விபத்து:பஸ்கள் மோதியதில் 10 பேர் படுகாயம்


கடமலைக்குண்டு அருகே விபத்து:பஸ்கள் மோதியதில் 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

பஸ்கள் மோதல்

தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் இருந்து நேற்று காலை மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் கடமலைக்குண்டு கிராமத்துக்கு வந்தது.

அப்போது வெள்ளிமலையில் இருந்து போடிக்கு செல்லும் அரசு பஸ்சும் அங்கு வந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னர் கடமலைக்குண்டுவில் இருந்து 2 பஸ்களும் புறப்பட்டன. 2 பஸ்களும் போட்டிபோட்டு சென்றதாக கூறப்படுகிறது.

வருசநாடு-தேனி சாலையில் கடமலைக்குண்டு அருகே டாணா தோட்டம் பகுதியில் சென்றபோது, பெண் ஒருவர் மோட்டார்சைக்கிளில் திடீரென சாலையின் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க, தனியார் பஸ் டிரைவர் பிரேக் போட்டார். அப்போது சுமார் 10 அடி இடைவெளியில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் தனியார் பஸ்சின் பின்புறம் மோதியது. மோதிய வேகத்தில் அரசு பஸ் சாலையின் வலது புறமாக திரும்பியது.

10 பேர் படுகாயம்

அப்போது எதிரே கடமலைக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி மீது பஸ் மோதி நின்றது. இதில், அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 10-க் கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மினி வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக தேனி-வருசநாடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையில் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story