குமாரபாளையம் அருகே மொபட் மீது லாரி மோதியதில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலி
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலியாகினர்.
கட்டிட தொழிலாளிகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோரணம்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம் (65). கட்டிட தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே எலந்தகுட்டையில் தங்கராஜின் உறவினரான கந்தசாமி என்பவரது வீட்டில் தங்கியிருந்து பல்லக்காபாளையம் அருகே ஆயிகவுண்டம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் தங்கராஜ், அருணாசலம் ஆகியோர் ஒரு மொபட்டில் எலந்தகுட்டையில் இருந்து ஆயிகவுண்டம்பாளையம் நோக்கி சென்றனர். மொபட்டை தங்கராஜ் ஓட்டினார். அருணாசலம் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது ரங்கனூர் அருகே பல்லக்காபாளையம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது ேமாதியது.
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த தங்கராஜ், அருணாசலம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான தங்கராஜிக்கு, செல்வி என்ற மனைவியும் சவுமியா, அனுசியா என்ற 2 மகள்களும், அருணாசலத்திற்கு, பழனியம்மாள் என்ற மனைவியும், செந்தில் குமார் என்ற மகனும், மலர்கொடி என்ற மகளும் உள்ளனர். விபத்தில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.