அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்புவில் சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்களாக 5 பேரை தமிழக அரசு நியமனம் செய்தது. அதன்படி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக திண்டுக்கல் விவேகானந்தா நகரை சேர்ந்த ஈஸ்வரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் எம்.வாசுதேவன், திண்டுக்கல் ரவுண்டுரோடு ராம்நகரை சேர்ந்த எம்.டி.விக்னேஷ் பாலாஜி, தாடிக்கொம்பு சாஸ்திரி நகரை சேர்ந்த ஆர்.சுசிலா, உண்டார்பட்டி பள்ளப்பட்டியை சேர்ந்த மு.கேப்டன் பிரபாகரன், திண்டுக்கல் நன்னியம்மாள் பேட்டையை சேர்ந்த ஜெ.ராமானுஜம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று மதியம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட அறங்காவலர்கள் நியமன குழு தலைவர் சுப்பிரமணி, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் 5 பேரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் தலைவராக விக்னேஷ் பாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டு அவரும் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் சுப.பெருமாள்சாமி, தாடிக்கொம்பு பேரூராட்சி துணை தலைவர் நாகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.