அரசு பஸ்சில் ஏ.சி. செயல்படாததால் பயணிகள் அவதி


அரசு பஸ்சில் ஏ.சி. செயல்படாததால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் ஏ.சி. செயல்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் ஏ.சி. செயல்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஏ.சி. வேலை செய்யவில்லை

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 7.15 மணிக்கு மதுரைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் குளிர்சாதன வசதி கொண்டதாகும். மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட இந்த பஸ்சில் கடந்த சில நாட்களாக ஏ.சி வேலை செய்யவில்லை என தெரிகிறது.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மதுரைக்கு புறப்பட்ட இந்த அரசு பஸ்சில் ஏ.சி. வேலை செய்யவில்லை என்றாலும் ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் சென்ற பயணிகளிடம் ரூ.73 கட்டணம் வசூலிக்கப்பட்டது. வழக்கமான சாதாரண பஸ்சில் ரூ.45 தான் கட்டணம். அதுபோல் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்வதற்காக இந்த பஸ்சில் ஏறிய பயணிகளிடமும் ரூ.130 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. மற்ற சாதாரண பஸ்சில் ரூ.110 தான் கட்டணம்.

வியர்வையில் தவித்த பயணிகள்

ஏ.சி.க்கும் சேர்த்து கூடுதல் கட்டணம் வசூலித்தும் ஏ.சி. வேலை செய்யாததால் இந்த பஸ்சில் இருந்த பயணிகள் மூச்சு விட முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். பஸ் முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்டிருந்ததால் வெளிகாற்றும் பஸ் உள்ளே வராததால் பயணிகள் கடும் புழுக்கத்தால் அவதி அடைந்தனர். பல பயணிகளின் சட்டைகள் வியர்வையில் நனைந்தன.

இது பற்றி கண்டக்டரிடம் பயணிகள் கேட்டபோது, எங்கள் டெப்போ அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஏ.சி.யை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. விரைந்து ஏ.சி.யை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என பேசி சமாளித்தார்.

கூடுதல் கட்டணம்

இது பற்றி பயணிகள் கூறும் போது, ஏ.சி. பஸ் என்பதால் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால் ஏ.சி. வேலை செய்யவில்லை என்ற போது கூடுதல் கட்டணம் எதற்காக கேட்க வேண்டும். வழக்கமான ஒன் டூ ஒன் பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்து இந்த பஸ்சை இயக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உடனடியாக பழுதான ஏ.சி.யை சரி செய்ய வேண்டும் என்றும் கண்டக்டரிடம் கூறினர்.

ஏ.சி.வேலை செய்யாததால் பஸ்சுக்குள் காற்று உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட மேல்பகுதி ஜன்னல் கதவு திறந்து வைக்கப்பட்டு பஸ் இயக்கப்பட்டது.


Related Tags :
Next Story