காஞ்சீபுரத்தில் காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
காஞ்சீபுரத்தில் காசோலை மோசடி வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரிடம் காஞ்சீபுரம் மாமல்லன் நகர் கே.டி.எஸ் மணி தெருவில் வசித்து வந்த குமார் (வயது 45) என்பவர் வீடு கட்டுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு 24 சதவீத வட்டிக்கு ரூ.35 லட்சம் கடனாக பெற்று உள்ளார். கடன் தொகையை சரவணன் பலமுறை குமாரிடம் கேட்டும் திருப்பி அளிக்காமல் இழுத்தடித்துள்ளார்.
மேலும் கடன் தொகை ரூ.35 லட்சம் மற்றும் அதற்கு உண்டான வட்டி என ரூ.45 லட்சத்திற்கு குமார் கடந்த 2014-ம் ஆண்டு வங்கி காசோலையாக அளித்து உள்ளார்.
குமார் அளித்த காசோலையை சரவணன் வங்கியில் செலுத்திய நிலையில் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து சரவணன் வாங்கிய கடனுக்கு வங்கியில் பணம் இல்லாமல் குமார் காசோலை கொடுத்து மோசடி செய்ததாக கூறி காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். காசோலை மோசடி வழக்கு தீர விசாரிக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு காசோலை கொடுத்து ஏமாற்றிய குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.90 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குமார் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தலை மறைவாக இருந்த நிலையில் சரவணன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடுத்ததன் அடிப்படையில் குமாரை கைது செய்ய கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குமாரை காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, குமார் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.