சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரநாராயண சுவாமி கோவில்
தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற உள்ளது.
கொடியேற்றம்
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் அதிகாலை 5.32 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, டாக்டர் சுப்பாராஜ், தொழிலதிபர்கள் திவ்யா ரெங்கன், ராமகிருஷ்ணன், சங்கரன், சங்கரசுப்பிரமணியன், சுந்தர், கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சரவணக்குமார், மாரிச்சாமி, குரு பிரியா, முத்துமாரி, ராஜேஸ்வரி கந்தன், முத்துலட்சுமி, ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், பா.ஜனதா மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி சுந்தர்ராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தபசு காட்சி
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் நாளான வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசுகாட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.
கொடியேற்ற விழா ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையதுறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.