சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சங்கரநாராயண சுவாமி
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும்.
சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக நடைபெறும்.
கொடியேற்றம்
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 6.20 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
கொடியேற்றம் நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, ஆணையாளர் சபாநாயகம், டாக்டர் சுப்பாராஜ், தொழில் அதிபர்கள் கனகவேல், ராமகிருஷ்ணன், சங்கர சுப்பிரமணியன், சங்கரன், கண்ணன், குமரன், தலைமை ஆசிரியர் பழனி செல்வம், சுந்தர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
29-ந் தேதி தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 31-ந் தேதி மாலையில் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.