பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா


பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா
x

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பெரியநாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூர விழா 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து பெரியநாயகி அம்மன் சன்னதியில் பராசக்தி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாட வீதிகளில் சாமி வீதி உலாவும் நடந்தது.

வளைகாப்பு

ஆடி பூர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மற்றும் வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதை யொட்டி பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அணிவித்து அலங்காரம், வளையல் பாவாடை அலங்காரம் செய்து, திருக்கல்யாணம் நடைபெற்றது.

தொடர்ந்து கொலு மண்டபத்தில் உற்சவர் பெரிய நாயகிஅம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதன்பிறகு வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல், தாலி சரடு, மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர்.

பக்தர்கள் தரிசனம்

குறிப்பாக திருமணமான பெண்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும், இளம்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டு வளையல் உள்ளிட்ட பொருட்களை வைத்து சாமி கும்பிட்டதை காண முடிந்தது.

அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வளையல் வழங்கப்பட்டது. அதன்பிறகு சாமி உள்பிரகாரத்தில் வலம் வந்து, சிவகர தீர்த்த குளத்தில் சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story