ஆடி அமாவாசை: அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்...!


ஆடி அமாவாசை: அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்...!
x

ஆடி அமாவாசையையொட்டி அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ராமேசுவரம்,

தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள்.

இந்த நிலையில் ஆடி மாத பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர். மேலும் கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரத வீதி வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அந்தப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி கடல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story