ஆட்டோவை வழிமறித்து இளம்பெண் வெட்டிக்கொலை


ஆட்டோவை வழிமறித்து இளம்பெண் வெட்டிக்கொலை
x

ஆட்டோவை வழிமறித்து இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவரும் தாக்கப்பட்டார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35), கொத்தனார். இவருடைய மனைவி வெள்ளத்துரைச்சி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் வெள்ளப்பனேரி கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு வெள்ளத்துரைச்சி சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு இரவில் பஸ்சில் புறப்பட்டார். ஆனால், அந்த பஸ் கட்டாரங்குளத்திற்கு செல்லவில்லை. 3 கிலோ மீட்டர் முன்னதாக உள்ள குமரெட்டியாபுரம் வரை மட்டுமே சென்றது. இரவு 10 மணி ஆகிவிட்டதால் வெள்ளத்துரைச்சி தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவரான வானரமுட்டியை சேர்ந்த சண்முகராஜ் (35) என்பவரது ஆட்டோவை வரவழைத்து அங்கிருந்து கட்டாரங்குளத்திற்கு புறப்பட்டார்.

வெட்டிக் கொலை

நள்ளிரவில் நாச்சியார்பட்டி-காளாம்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது. அப்போது, மோட்டார் சைக்கிளில் ஒரு மர்மநபர் வந்தார். அவர் ஆட்டோவை வழிமறித்து மேய்ச்சலுக்கு விட்ட எனது ஆடுகளை காணவில்லை. அதை பார்த்தீர்களா? என்று கேட்டார். ஆட்டோ டிரைவர் சண்முகராஜ் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறினார். இதையடுத்து ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது.

சிறிது தொலைவில் சென்றபோது மீண்டும் அந்த நபர், ஆட்டோவை வழிமறித்து மீண்டும் ஆடுகள் குறித்து கேட்டார்.

அப்போது, கீழே இறங்கிய சண்முகராஜை திடீரென்று அந்தநபர் தான் வைத்திருந்த கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து வெள்ளத்துரைச்சி அலறினார். உடனே அந்த மர்மநபர் ஆட்டோவில் அமர்ந்திருந்த வெள்ளத்துரைச்சியின் தலையில் அரிவாளால் பலமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மர்மநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

போலீசார் விரைந்தனர்

பின்னர் மயக்கம் தெளிந்து கண் விழித்த சண்முகராஜ் ஆட்ேடாவில் வெள்ளத்துரைச்சி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக அவர் நாலாட்டின்புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சண்முகராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட வெள்ளத்துரைச்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்ட பின்னர்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story