கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் ஒருமாத குழந்தையை விட்டுச்சென்ற இளம்பெண்


கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் ஒருமாத குழந்தையை விட்டுச்சென்ற இளம்பெண்
x

கோயம்பேடு பஸ் நிலையத்தில் சவாரி வந்த ஆட்டோவில் ஒரு மாத பெண் குழந்தையை இளம்பெண் விட்டுச்சென்று விட்டார். டிரைவர் அந்த பச்சிளம் குழந்தையை போலீசில் ஒப்படைத்தார்.

சென்னை

சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர் காதர்(வயது 29). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று மாலை செங்குன்றம் ஆட்டோ நிறுத்தத்தில் சவாரிக்காக நின்றிருந்தார்.

அப்போது 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், கைக்குழந்தையுடன் அவரது ஆட்டோவில் ஏறினார். அவர், கோயம்பேடுக்கு சவாரி செல்ல வேண்டும் என டிரைவர் காதரிடம் கூறினார். இதையடுத்து அவர், கோயம்பேடுக்கு கைக்குழந்தையுடன் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய இளம்பெண், ஆட்டோ டிரைவருக்கு தெரியாமல் தான் வைத்திருந்த கைக்குழந்தையை ஆட்டோவின் பின்பக்க இருக்கையில் அமர்த்தி விட்டு நைசாக இறங்கி சென்று விட்டார்.

இது தெரியாமல் காதர், ஆட்டோவை ஓட்டிக்கொண்டு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மாதவரம் ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஆட்டோவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு பார்த்தபோது, தனது ஆட்டோவில் இளம்பெண் தூக்கி வந்த ஒரு மாத பெண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் இருப்பதை கண்டார்.

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆட்டோவில் இளம்பெண் தவிக்க விட்டு சென்ற பச்சிளம் பெண் குழந்தையை கைப்பற்றி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குழந்தைகள் நல காப்பக ஊழியர் லலிதா விரைந்து வந்து குழந்தையை பெற்றுக் கொண்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்.

இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவில் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர், பெண் குழந்தை என்பதால் வளர்க்க மனம் இன்றி ஆட்டோவில் விட்டுச்சென்றாரா? அல்லது முறை தவறி பிறந்த குழந்தையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story