சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி இளம்பெண் பலி; 7 பேர் படுகாயம்
கோவில்பட்டி அருகே சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளம்பெண் பலியானார். அவரது பெற்றோர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி:
கோவை காந்திநகர் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் இசக்கி மகன் பாக்கியராஜ் (வயது 42). கார் டிரைவரான இவர் தனது மனைவி ராமலட்சுமி (40), மகள் சக்திஅபிராமி (18), மகன் சக்திமுருகன் (16), உறவினர்களான முத்துமாரி, பராசக்தி, மணிகண்டன், பெரியசாமி ஆகியோருடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று காரில் புறப்பட்டனர்.
மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி விலக்கு பகுதியில் கார் வந்து கொண்டு இருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 8 பேரும் படுகாயம் அடைந்து அலறினார்கள். காரும் சேதமானது.
இதை பார்த்த அந்த பகுதியில் சென்றவர்கள் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ேபாலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி அபிராமி பரிதாபமாக இறந்தார். மற்ற 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.