பெண் டாக்டரிடம் கத்திமுனையில் நகை பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்


பெண் டாக்டரிடம் கத்திமுனையில் நகை பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
x

பெண் டாக்டரிடம் கத்திமுனையில் நகை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

அணைக்கட்டு

பெண் டாக்டரிடம் கத்திமுனையில் நகை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓய்வு பெற்ற டாக்டர்

பள்ளிகொண்டா செல்லும் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் டாக்டர் சந்திரகலா (வயது 65). ஓய்வு பெற்ற அரசு டாக்டரான இவர் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வருகிறார். நேற்று மதியம் இவரது கிளினிக்கில் எதிர்வீட்டில் வசிக்கும் காண்டிராக்டரான இளையராஜா பேசிக்கொண்டிருந்தார்.

பகல் 1.30 மணியளவில் வாலிபர் ஒருவர் நோயாளி போல் கிளினிக்கிற்கு வந்தார். அவரை டாக்டர் சந்திரகலா பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை தருமாறு மிரட்டினார்.

இதனை சற்றும் எதிர்பாராத டாக்டர் சந்திரகலா மற்றும் அருகில் இருந்த காண்டிராக்டர் இளையராஜா ஆகியோர் கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து வெளியே ஓடி தப்ப முயன்றார்.

அப்போது, வீட்டின் வெளியே இருந்த பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதனையடுத்து பொதுமக்களின் உதவியுடன் வாலிபரின் கைகளை கயிற்றால் கட்டிய இளையராஜா அவரை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தொடர்ந்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் தனது பெயர் மணிகண்டன் (40) என்றும் திருநெல்வேலி மாவட்டம் மாதா நடுத்தெரு என்றும் கூறினார். அவர் பறித்த 4 பவுன் வளையல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

10 பேர்

மணிகண்டனுடன் 10 பேர் கொண்ட குழுவினர் வேலூருக்கு வேலை தேடி வந்ததாகவும், வயிற்று பிழைப்புக்காக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அவர் போலீசாரிடத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story