மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்தவர் வினோத் (வயது 27). கூலித்தொழிலாளி. இவரும், அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த அருள் ஆண்டனி (22) என்பவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வினோத் ஓட்டினார்.
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் குட்டியபட்டி பிரிவு அருகே அவர்கள் வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த நெப்போலியன் (33) என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து வினோத், அருள் ஆண்டனி ஆகிய 2 பேரும் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருள் ஆண்டனி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நெப்போலியன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.