வீட்டில் இருந்து வெளியே சென்ற தொழிலாளி கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு
நச்சலூர் அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற தொழிலாளி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
தொழிலாளி
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள தெற்கு மாடு விழுந்தான் பாறையை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பல இடங்களில் பாண்டியனை உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை.இதற்கிடையில் நேற்று முன்தினம் தெற்கு மாடு விழுந்தான் பாறையில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை அப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
பிணமாக மீட்பு
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு பிணமாக மிதப்பது வீட்டில் இருந்து வெளியே சென்ற பாண்டியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் பிணமாக மிதப்பது பாண்டியன் தான் என்பதை உறுதி செய்தனர்.பின்னர் முசிறி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் இறங்கி பாண்டியனின் உடலை மேலே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து பாண்டியன் மனைவி ஜெம்புகேஸ்வரி ெகாடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.