தண்டவாளம் அருகே பிணமாக கிடந்த தொழிலாளி
முப்பந்தல் அருகே தண்டவாளம் பகுதியில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். அவர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
முப்பந்தல் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை ஒட்டியபடி வாயில் நுரை தள்ளிய நிலையில் வாலிபர் ஒருவர் நேற்று காலையில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவரின் அருகில் அவரது செல்போன் கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு நடத்திய விசாரணையில் அவர் யாரென்று தெரியவந்தது.
அதாவது அவர் தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த பாபநாசம் மகன் இசக்கிராஜூ (வயது 34). திருவனந்தபுரம் அருகே உள்ள பூவாரில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே அவர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனை அடைக்க அவர் மேலும் கடன் வாங்கியதாக தெரிகிறது.
மகனின் இந்த செயலை அவருடைய தந்தை பாபநாசம் கண்டித்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இசக்கிராஜூ முப்பந்தல் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு வந்துள்ளார்.
அதன்படி முப்பந்தல் கோவிலுக்கு வந்த அவர் கடன் தொல்லையால் இனி வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்துள்ளார். பின்னர் ரெயில் தண்டவாளம் அருகே அமர்ந்தபடி விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.