விராலிமலையில் மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்
விராலிமலையில் பயனற்று கிடக்கும் அரசு கட்டிடங்களை இடித்து மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராலிமலை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையானது விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் நிறைந்த பகுதியாகும். விராலிமலையை சுற்றி அதிக தொழிற்சாலைகள் உள்ளதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ச்சியடைந்து வரும் விராலிமலை கடந்த 2015-ம் ஆண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது.
இங்கு போலீஸ்நிலையம், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
காட்சி பொருளாக இருக்கும் அரசு கட்டிடங்கள்
இந்தநிலையில், விராலிமலையில் பல்வேறு அரசு கட்டிடங்கள் தற்போது பயன்பாடின்றி வெறும் காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் புதிதாக அரசு சார்பில் கொண்டுவரும் திட்டங்களுக்கு இடம் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. விராலிமலை கடைவீதியில் தபால் துறை அலுவலகம் எதிரே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விராலிமலை அரசு மருந்தக மருத்துவர் தங்கும் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 80 ஆண்டுகள் பழமையானது.
மேலும் இக்கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த மருத்துவரும் தங்கவில்லை. இதனால் இக்கட்டிடமானது மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதுடன் மேற்பகுதி முழுவதும் மரங்கள் முளைத்துள்ளன. மேலும் இக்கட்டிடத்தை ஒட்டியே கோவில் மற்றும் பிரதான சாலை இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
போலீஸ் குடியிருப்பு
புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 2016-ம் ஆண்டு சேவை மைய கட்டிடம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அந்த கட்டிடமானது சேதமடைந்து காணப்படுகிறது. இதேபோல் சமுதாய கூடத்திற்கு அருகே உள்ள பொது கழிப்பறை கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை திறக்கப்படாமல் சேதமடைந்து சுற்றிலும் முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது.
விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடமானது எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. இதேபோல் விராலிமலை பகுதியில் பயன்பாடின்றி இருக்கும் அரசு கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
மகளிர் காவல் நிலையம்
விராலிமலையை சேர்ந்த புவனேஷ்வரி:- விராலிமலையில் ஏற்கனவே போலீஸ் நிலையம் உள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனியாக மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். தற்போது பெண்கள் தொடர்பான குற்ற விசாரணைக்கு விராலிமலையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போதைய சூழலில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை விரைந்து முடிக்க ஏதுவாக விராலிமலையில் புதிதாக மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். இதற்கு தேவையான இடத்தை அரசு அதிகாரிகள் தேர்வு செய்ய வேண்டும்.
தீயணைப்பு நிலையம்
விராலிமலை காமராஜர் நகரை சேர்ந்த சக்திவேல்:- விராலிமலையானது தொழிற்சாலை நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. விராலிமலை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பாதுகாப்பு உபகரணங்கள் இருந்த போதிலும் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படும்போது அதனை அணைக்க இலுப்பூர், திருச்சி அல்லது மணப்பாறையிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வர வேண்டி உள்ளது. மேலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் தீ விபத்து, பாம்புகளின் தொல்லை, கிணற்றில் ஆடு, மாடுகள் விழுதல் மற்றும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும் போது விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக பயனற்று கிடக்கும் அரசு கட்டிடங்களை இடித்து விராலிமலையிலேயே தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
அரசு துணை கருவூலம்
விராலிமலை வர்த்தக கழக தலைவர் ராமச்சந்திரன்:-
விராலிமலையில் பல்வேறு தரப்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளத்திற்கான விவரங்களை அரசு கருவூலத்தில் கொடுத்த பின்னரே சம்பளம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மேலும் பத்திரப்பதிவிற்கான பத்திரங்கள் அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்படும் தொகைக்கான செலுத்து சீட்டுகள் (சலான்), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவது தொடர்பான விவரங்களுக்காகவும் இலுப்பூரில் உள்ள அரசு துணை கருவூலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. பிறப்பு, இறப்பு தாமத அபராத கட்டணம், நில அளவை கட்டணம், சொத்து மதிப்பிற்கான கட்டணம் உள்ளிட்டவைகள் நேரடியாக இணையவழியில் கட்டும் முறை வந்தாலும் இதர சேவைகளுக்கு விராலிமலையில் அரசு துணை கருவூலம் அமைத்தால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயனற்று கிடக்கும் அரசு கட்டிடங்களை இடித்து பொதுமக்களுக்கு தேவையானவற்றை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.