கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
கரூர் அருகே கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது. இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மருத்துவ உதவியாளர்
கரூர் மாவட்டம், வெள்ளியணை வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பாலு (வயது 40). இவரது மனைவி தனலெட்சுமி (36). இத்தம்பதிக்கு அபர்ணா (17) என்ற மகளும், நிதீஷ்குமார் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அபர்ணா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2-வும், நிதீஷ்குமார் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
பாலு மலைக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் சிக்கிய பாலு உடல் நிலை சரியில்லாமல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனலெட்சுமிக்கு அதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவ குழுவின் உதவியாளராக பணி வழங்கப்பட்டு அங்கு பணியாற்றி வந்தார்.
கோவிலுக்கு சென்றார்
இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து தனலெட்சுமி தனது மொபட்டில் வெள்ளியணை மாரியம்மன் கோவிலுக்கு விளக்கு போட்டு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இரவு வேகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அவர் ஓட்டி சென்ற மொபட்டும், அதன் கவரில் செல்போன் மட்டும் இருந்துள்ளது. இதுகுறித்து உறவினர்கள் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
கிணற்றில் பிணம்
இந்தநிலையில் நேற்று மதியம் மாரியம்மன் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒத்தையூர் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மதிப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்து அங்கு இறந்து கிடப்பது தனலெட்சுமி தான் என்பதை உறுதி செய்து, வெள்ளியணை போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
உறவினர்கள் மறியல்
ஆனால் உறவினர்கள் ஒன்று திரண்டு வந்து ஒத்தையூர் பகுதியில் உள்ள கரூர்-திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தனலெட்சுமி மாயமான குறித்து புகார் அளித்தும் போலீசார் விரைந்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், தனலெட்சுமி கொலை செய்யப்பட்டு தான் கிணற்றில் வீசப்பட்டுள்ளார். எனவே கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
வாகனங்கள் மாற்றுபாதையில் சென்றது
பின்பு தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தனலெட்சுமியின் உடலை மீட்டனர். இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, தனலெட்சுமி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலையா? கொலை செய்யப்பட்டரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசபாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.